728 X 90 Ad slot

Monday, August 1, 2011

TN Govt trying to give Standard Education - Vijayakanth



TN Govt trying to give Standard Education - Vijayakanth

சென்னை:""மாணவர்களுக்கு, தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. எனவே, கருணாநிதியின் போராட்ட சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், கட்சி, "டிவி' மூலம் பொதுமக்களின் இ-மெயில் கேள்விகளுக்கு நேற்று அளித்த பேட்டி:


* லோக்பால் வரம்பிற்குள் பிரதமரை சேர்க்காதது குறித்து உங்கள் கருத்து?
"2ஜி' ஒதுக்கீடுகள் பிரதமருக்கு தெரிந்தே நடந்தது என ராஜாவும், அவரது உதவியாளர் பெகுராவும் கூறுகின்றனர். அப்படியென்றால், இது குறித்து பிரதமரை அழைத்தும் விசாரிக்க வேண்டும். லோக்பால் வரம்பிற்குள் பிரதமர், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் வரவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அவர்களை மட்டும் லோக்பால் வரம்பிற்குள் ஏன் கொண்டுவரவில்லை என்பது எனக்கு புரியவில்லை.


* லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ., வரவேண்டும் என அன்னா ஹசாரே கூறியுள்ளது பற்றி?
பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் சி.பி.ஐ., உள்ளது. ஊழல் செய்தவர்களை பிடிக்காமல், ஆளுங்கட்சிக்கு துணையாக எதிர்க்கட்சிகளை பயமுறுத்தும் நடவடிக்கையை தான் சி.பி.ஐ., செய்கிறது. முன்பு காங்கிரசை ஆதரித்த மாயாவதி, முலாயம்சிங் ஆகியோர் இதற்கு உதாரணம்.


கோதுமை பேர ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க இந்திரா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கருணாநிதி கூட்டு சேர்ந்தார். அதோடு இந்த ஊழல் குற்றச்சாட்டு முடிந்துவிட்டது. "2ஜி' விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தோண்டியதால் தான் சி.பி.ஐ., இவ்வழக்கில் முறையாக நடந்து கொள்கிறது. எனவே, லோக்பால் வரம்பிற்குள் சி.பி.ஐ.,யை கொண்டு வர வேண்டியது அவசியம்.


* ராஜா, பெகுரா ஆகியோர், சிதம்பரத்தை பற்றி கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் என்கிறாரே கபில் சிபல்?
ராஜா உண்மை பேசுகிறாரா அல்லது பொய் பேசுகிறாரா என தெரியவில்லை. எனவே, கோர்ட்டிற்கு சென்று ராஜா சொல்வது பொய் என்பதை சிதம்பரம் தான் நிரூபிக்க வேண்டும்.


* தி.மு.க., பொதுக்குழுவிற்கு பின் பிரதமர் மற்றும் சிதம்பரம் மீது ராஜா குற்றம்சாட்டியுள்ளதில் உள்நோக்கம் உள்ளதா?
காங்கிரசுடன் நட்பாக இருக்கிறோம் என, பொதுக்குழுவில் கருணாநிதி கூறியுள்ளார். கொஞ்சம் நாட்களுக்கு முன், இதே வாயால், "கூடா நட்பு கேடாய் முடியும்' என்றார். "தனி ஒருவனால் இந்த ஊழலை செய்யமுடியாது' என்று கூறி, முன்பு, காங்கிரசை பயமுறுத்தினார்.
"காங்கிரஸ் சொன்னால் மட்டுமே கூட்டணியை விட்டு வெளியே போவோம்' என்கிறார். இப்போது தி.மு.க., பொதுக்குழுவிற்கு பிறகு கோர்ட்டில் ராஜா காட்டிக்கொடுக்கிறார் என்றால், இதில் உள்நோக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.


* சமச்சீர் கல்வியை தி.மு.க., அரசியலாக்க பார்ப்பது குறித்து உங்கள் கருத்து?
பொதுப்பாடத்திட்டத்தைதான் இவர்கள் சமச்சீர் கல்வி என்கின்றனர். சென்னையை தாண்டி வெளியே சென்றால், அரசு பள்ளிகள் மரத்தடியில்தான் இயங்குகின்றன. ஐந்து முறை முதல்வர் என கூறிக்கொண்ட கருணாநிதி இந்த குறைகளை சரிசெய்யாமல் இப்போது குதிக்கிறார். கவிஞர் கனிமொழியின் கவிதை ஆராய்ச்சி என்ற பாடத்தை வைத்துள்ளனர். அவர் இன்று திகார் ஜெயிலில் ஆராய்ச்சி செய்துக்கொண்டுள்ளார். அந்தளவிற்கு சத்தான உணவு போல் சத்தான கல்வி இல்லை. மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்கத்தான் இன்றைய அரசு போராடுகிறது. கூட்டணி கட்சி என்பதற்காக இதை சொல்லவில்லை; உண்மையைதான் பேசுகிறேன்.


* சமச்சீர் கல்வி தொடர்பாக, கருணாநிதி அறிவித்துள்ள அறப்போராட்டம் பற்றி?
மாணவர்களை படிக்க சொல்லாமல் போராட்டம் நடத்த சொல்கிறார். நில அபகரிப்பு, ஊழல் வழக்கு என, தி.மு.க., தொண்டர்கள் ஓடி ஒளிந்துக் கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் மாணவர்களையும், ஆசிரியர்களையும் இழுக்கிறார். தமிழின தலைவர் எனக் கூறி இலங்கை தமிழர்களை அழித்ததுபோல் மாணவர்களையும், ஆசிரியர்களையும் அழிக்க பார்க்கிறார். அவரது சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


* உளவுத்துறை முன்னாள் ஏ.டி.ஜி.பி., ஜாபர்சேட் வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியுள்ளதே?
போலீஸ் உங்கள் நண்பன் என்பார்கள். ஆனால், இந்த போலீஸ் அதிகாரி, கருணாநிதியை தவிர மற்ற எல்லாருக்கும் எதிரியாகவே இருந்துள்ளார். அவசர தேவைக்கு பேசும் மொபைல்போன் பேச்சை ஒட்டுகேட்கும் கேவலமான தொழில் செய்துள்ளார். அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டியவர்கள் இப்படி இருக்கும் வரை நாடு உருப்படாது.


* தி.மு.க., தோற்றதற்கு நானே காரணம் என்கிறாரே கருணாநிதி?
அவர் தான் காரணம் என்றால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வழிவிட்டு பதவியில் இருந்து விலக வேண்டும். தமிழகத்தில் வெறுப்பு அரசியல் நடப்பதாக கூறுகிறார். மக்கள் வெறுத்துபோய்தான் இவரை வேண்டாம் என வெறுத்துவிட்டனர்.
தன் மகள் சிறையில் இருந்து வெளியில் வந்தால், அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பதற்காகவே, இரண்டு அமைச்சர் பதவியை வேண்டாம் என கருணாநிதி கூறியுள்ளார். இவரை பொறுத்தவரை, குடும்பம்தான் கழகம் என்பது தெளிவாகிவிட்டது.
இவ்வாறு விஜயகாந்த் பேட்டியளித்தார்.

Monday, August 1, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “TN Govt trying to give Standard Education - Vijayakanth”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...