728 X 90 Ad slot
Monday, August 1, 2011
ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை கைது: நில மோசடியில் அடுத்த திருப்பம்
திருச்சி:திருச்சியில் நிலம் அபகரிப்பு புகார் தொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், "துணைவியார்' ராஜாத்தியின் கணக்குப்பிள்ளையாக இருந்த ரமேஷை, போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே, "ஸ்பெக்ட்ரம்' உள்ளிட்ட பல்வேறு ஊழல் பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் முன்னாள் முதல்வர் குடும்பத்துக்கு, மற்றொரு பெரும் பிரச்னையாக இது எழுந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக, நில அபகரிப்பு மோசடி விவகாரத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களும், அதை ஒட்டி போலீஸ் நடவடிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. நிலமோசடி தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், கோவை சிறையில் இருக்கிறார். பாளையங்கோட்டை சிறையில், மத்திய அமைச்சர் அழகிரிக்கு வேண்டியவர் தற்போது அடைக்கப்பட்டிருக்கிறார்.
நில மோசடிப் புகார் தினமும் குவிந்த வண்ணமும், அதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
இந்த நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள எடமலைப்பட்டிபுதூர், ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள், திருச்சி, டி.ஆர்.ஓ., பேச்சியம்மாளிடம், கடந்த ஜூலை 25ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "ராஜிவ் நகரில், 1.4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், 31 குடும்பங்கள் வசித்து வந்தோம். காரைக்குடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் புஞ்சை நிலத்துக்கு முன், இந்த புறம்போக்கு நிலம் உள்ளது.
ஊர் தலைவர் ஒப்புதலின் பேரில், கடந்த, 20 ஆண்டாக வீடு கட்டியும், குடிசை அமைத்தும் குடியிருந்து வருகிறோம். அந்த பகுதியிலிருந்து அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு, வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தெருவிளக்கும் அமைத்திருந்தனர். அந்த இடத்துக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று, அப்போதைய அமைச்சர் நேருவிடம் முறையிட்டோம்.
இதற்கிடையே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின், "துணைவியார்' ராஜாத்தியின் கணக்குப்பிள்ளையாக உள்ள ரமேஷ் மற்றும் காரைக்குடியை சேர்ந்த, ரியல் எஸ்டேட் அதிபர் தம்பி ராஜா ஆகியோர், "சதுரஅடிக்கு 200 ரூபாய் தருகிறோம், இடத்தை காலி செய்யுங்கள்' என்று எங்களிடம் கேட்டு, மறுத்ததாக கூறப்பட்டது. அங்கு, காலியாக இருந்த மற்றொருவர் இடத்தில் தம்பிராஜா, காளிதாஸ் ஆகிய இருவரும் குடிசை போட்ட போது, நாங்கள் தட்டிக் கேட்டபோது, மிரட்டினர்.
அப்போது, ஆட்சி மற்றும் அதிகார பலம் இருந்ததால், தொடர்ந்து பல வகையில் எங்களுக்கு, "டார்ச்சர்' கொடுத்து ரமேஷ் தரப்பினர் மிரட்டினர். அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, நீதிமன்ற உத்தரவையும் மீறி, எங்களது வீடுகளை இடித்துத்தள்ளி, தரைமட்டமாக்கினர்' என, புகாரில் தெரிவித்தனர்.தனியார் நிலத்தில் உள்ள வீடுகளை இடித்தது எப்படி என்றும், புகாரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின், "துணைவியார்' ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷ், தம்பிராஜா ஆகியோர் மீது மட்டுமல்லாது, துணைபோன டி.ஆர்.ஓ., - தாசில்தார் - ஆர்.ஐ., என, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனர்.
சிறையில் அடைப்பு: புகார் குறித்து, எடமலைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்; போலீசார், வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்து வந்த போலீசார் நேற்று முன்தினம், ரியல் எஸ்டேட் அதிபர் தம்பிராஜாவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் இருந்த, ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷையும் போலீசார் நேற்று முன்தினம் திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், விசாரணையில் உண்மை இருப்பதாக தெரியவந்ததால், நேற்று மதியம் ரமேஷையும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர்.அவர் மீது, ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ரமேஷ், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.தற்போது கைதாகியுள்ள ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷ் மூலம் தான், தமிழகத்தில் பல இடங்களில் நிலங்கள் வளைக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. ஏற்கனவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கித்தவிக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தாருக்கு, துணைவியார் ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை ரமேஷ் கைது மூலம் மற்றொரு பிரச்னை வந்து, அது, பெரிதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end
web developer. Follow him on Twitter
0 Responses to “ராஜாத்தியின் கணக்குப்பிள்ளை கைது: நில மோசடியில் அடுத்த திருப்பம்”
Post a Comment