728 X 90 Ad slot

Sunday, September 25, 2011

Cong.,PMK.,BJP.,MDMK.,VC., - Shocked


காங்., - பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - வி.சி., கட்சிகள் திணறல்


சென்னை: அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டு, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், காங்கிரஸ், பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட திணறுகின்றன.

நீண்ட ஆலோசனைகளுக்கு பின், மார்க்சிஸ்ட் கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில், 4 மேயர், 109 மாநகராட்சி கவுன்சிலர்கள், 17 நகராட்சி தலைவர்கள், 48 பேரூராட்சி தலைவர்கள், 33 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அ.தி.மு.க.,வுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடர்வதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. கூட்டணி இருக்கும் நேரத்தில், இக்கட்சிகள் தங்களுக்கு பலம் உள்ள உள்ளாட்சி இடங்களை மட்டும் ஒதுக்கி வாங்கிக் கொண்டு, மற்ற இடங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்தன. தனித்துப் போட்டி என்பதால், பலம் இல்லாத இடங்களில் போட்டியிடுவதை தவிர்க்கவும் முடியவில்லை. போட்டியிடுவதற்கு ஆட்களை பிடிப்பதும் சாதாரண வேலையாக இல்லை.

தமிழகத்தில், 9 மேயர், 755 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 நகராட்சி தலைவர்கள், 3,697 வார்டு உறுப்பினர்கள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 வார்டு உறுப்பினர்கள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகள் உள்ளன. இதுதவிர, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளின் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983 பதவிகள் உள்ளன.

உள்ளாட்சி அமைப்பில் ஒரு கட்சி தனித்துப் போட்டியிடும்போது, ஒரு லட்சத்து 25 ஆயிரம் வேட்பாளர்கள் தேவை. கிராமங்கள் தோறும் கிளைகள் வைத்திருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் ஆதரவாளர்களை வைத்திருக்கும் கட்சிகளுக்கு, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது சிம்ம சொப்பனமே. இந்நிலையில், காங்கிரஸ், பா.ம.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள், அக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லாத பகுதிகளில், வேட்பாளர்களை நிறுத்துவதற்கு திணறி வருகின்றன. சுயேச்சையாக போட்டியிட திட்டமிடும் வேட்பாளர்களை, அவர்களது கட்சி வேட்பாளர்களாக்க முயற்சிக்கின்றன. கட்சியிலிருக்கும் சாதாரண தொண்டனை, வேட்பாளராக்கும் நிலையும் அக்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், எப்போதாவது கட்சி வேட்பாளராக மாட்டோமா? என ஏங்கியவர்களுக்கு, யோகம் அடிக்கிறது. வேட்பாளர் கிடைத்தால் போதும் என நினைப்பதால், எதிரணியில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இணையான ஒருவரை நிறுத்தி போட்டியை கடினமாக்க வேண்டும் என்ற உத்தியெல்லாம் காற்றில் பறந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தலில் கணிசமான ஓட்டுகளைப் பெற்று, தனித்து விட்டாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் முன், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் வேட்பாளர்களை நிறுத்தும் அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க கடும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

tamil nadu all political parties flag
Sunday, September 25, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Cong.,PMK.,BJP.,MDMK.,VC., - Shocked”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...