728 X 90 Ad slot

Saturday, April 23, 2011

கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெ., ஆவேசம்


சென்னை: ""இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்ததற்காக, கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த 2008 செப்டம்பர் முதல் 2009 மே 19ம் தேதி வரை, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை ராணுவம், மிகப் பெரிய அளவில் குண்டு மழை பொழிந்து, அப்பாவித் தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்தது. மூன்று லட்சத்து 30 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவிற்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த கொடுஞ்செயலுக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்ஷே, சர்வதேச கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, போர் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டுமென சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இதுகுறித்து எதிர்ப்பையோ, வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை. மாறாக, 2009 அக்டோபரில், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க., - காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் குழு, இலங்கைக்கு சென்றது. இலங்கையில் எல்லாமே நன்றாக உள்ளதென்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவிற்கு புகார்கள் ஒன்றுமில்லை எனவும் இக்குழு தெரிவித்தது.

என்னதான் இவர்கள் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்தாலும், இலங்கை நிலவரத்தை கண்டறிய, ஐ.நா., சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கையில், இலங்கையில் இனப் படுகொலைகள் நடந்துள்ளன என்பது தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வர, 2009 ஏப்ரல் 27ம் தேதி, கருணாநிதி, மூன்று மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது கடப நாடகம் என்பது தெளிவாகிறது. மேலும், தமிழினப் பாதுகாவலர் என, தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷமும் கலைக்கப்பட்டு உள்ளது. எனவே, தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி, தங்களிடம் பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டுமென தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Saturday, April 23, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “கருணாநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெ., ஆவேசம்”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...