728 X 90 Ad slot

Saturday, June 11, 2011

கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்


முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, மும்பை தொழிலதிபர்கள், மத்திய அரசின் உயரதிகாரிகள் போன்றோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் வைத்து, பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய, ஓ.பி.சைனி தலைமையில் இயங்கி வரும் சி.பி.ஐ., கோர்ட், கோடை கால விடுமுறைக்காக நேற்றிலிருந்து, வரும் ஜூலை 4 வரை மூடியிருக்கும்.


"ஸ்பெக்ட்ரம்' ஊழலில், குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்களும் மற்றும் பலரும் காலையிலும், மதியமும் கோர்ட்டில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை கழித்து வந்தது, இனி மூன்று வாரங்களுக்கு முடியாமல் போய்விடும். இந்த கோர்ட் விடுமுறை நாட்களில், 24 மணிநேரமும் அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதகாலமாக, பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், இந்த வி.ஐ.பி.,க்கள் தினசரி வந்து போவதால், பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால், கோர்ட்டில் கூடுதலாக "ஏசி' வசதிகள் செய்யப்பட்டன.


காலை 10 மணிக்கு, நீதிபதி சைனி, கோர்ட்டிற்கு வருவதற்கு முன்பே, இந்த பிரமுகர்கள் போலீசாரால் ஆஜர் படுத்தப்படுவார்கள். மதிய உணவு இடைவேளையின் போது, கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பகல் உணவு வழங்கப்படும்.கோர்ட், மீண்டும் பகல் 2 மணிக்கு தொடங்குவதற்கு முன், அவர்கள் உள்ளே அழைத்து வரப்படுவார்கள். கோர்ட்டின் அலுவல்கள் 3:30 மணிக்கு முடியும் போது, அவர்கள் தனி வேன்களில் 15 கி.மீ., தொலைவில் உள்ள மேற்கு டில்லியின் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.


விடுமுறைக்கு முன், கோர்ட்டின் கடைசி நாளான நேற்று, இந்த பிரமுகர்களின் குடும்பத்தினர் பலரும் வந்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கோர்ட் விடுமுறை நாட்களில், குடும்பத்தினர் இவர்களை பார்க்க வேண்டுமென்றால், சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் சில நிமிடங்கள் சந்திக்க முடியும். ஆனால், கோர்ட்டில் இவர்களின் குடும்பத்தினர் சுலபமாக சந்திக்க முடியும். மணிக்கணக்கில் பேசவும் முடியும்.


நேற்று காலை 10 மணிக்கெல்லாம், கனிமொழியின் தாயார் ராஜாத்தி வந்துவிட்டார். திகார் சிறைக்கு அருகே, ரயில்வே மேம்பாலம் பழுதடைந்துள்ளதால், கைதானவர்களை கோர்ட்டுக்கு கொண்டு வரும் வேன்கள், 10:30 மணிக்கு வந்தன. ராஜாத்தி, அரவிந்தன், மகன் ஆதித்யா, நாள்முழுவதும் கனிமொழியுடன் பொழுதைக் கழித்தனர்.ராஜா, தன் மனைவி பரமேஸ்வரியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.


சென்னையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும், "கலைஞர் டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் மகன் சித்தார்த், மகள் சாக்ஷி, நீண்ட நாள் கழித்து தந்தையுடன் பல மணி நேரம் உடனிருந்தனர். 10 வயதான சித்தார்த், தனது தந்தையை கட்டிப்பிடித்த போது சரத், கண்கலங்கினார்.டி.பி.ரியாலிடி அதிபர் சாகித் பல்வாவும், சினிமா பட அதிபர் கரீம் மொரானி ஆகியோரும் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தனர்.


மதியம் கோர்ட் கூடியதும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமினுக்காக டில்லி ஐகோர்ட்டில் வாதாடிய பிரபல வக்கீல் அல்டாப் உசேன், கனிமொழியுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கனிமொழியின் ஜாமின் மீது, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு குறித்து, முறையீடு செய்யும் போது, தான் வைக்கப்போகிற வாதங்கள் குறித்து கனிமொழியுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, அல்டாப் உசேன், சரத்குமாரோடும், முன்னாள் அமைச்சர் ராஜாவோடும் பேசிக் கொண்டிருந்தார்.


மாலை 5 மணிக்கு கோர்ட் முடிந்தவுடன் கனிமொழி, ராஜா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு, வேன்கள் மூலம் திகார் சிறைக்கு சென்றனர்.
கனிமொழி, கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லபட்ட போது, ராஜாத்தி கண்கலங்கினார். பல்வாவின் குடும்பத்தினர் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.


கோர்ட் விடுமுறைக்காக மூடுவதற்கு முன் நீதிபதி சைனி, பல்வாவின் மனுவை தள்ளுபடி செய்து அவருக்கும், வினோத் கோயங்காவுக்கும் கோர்ட் நேரத்தை வீணடித்ததற்காக, அபராதம் வைத்தார்.பல்வா, கோயங்கா ஆகியோர் இருவரும், தங்களது எடிசாலட் கம்பெனியின் பங்குதரார்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மும்பைக்கு ஜூன் 15ம் தேதி செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பை செல்வதற்கு தனது அனுமதியை மறுத்தார்.


மூன்று தலைமுறை சோகம்: மகள் கனிமொழியை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்த ராஜாத்தி, அம்மாவை பார்க்க வந்த ஆதித்யா என, மூன்று தலைமுறையும் சோகத்தில் காணப்பட்டது. கோர்ட்டில், கண்களில் கண்ணீருடன் இருந்த கனிமொழியின் மடியில், மகன் ஆதித்யா நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.

Saturday, June 11, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...